தென்மேற்கு மூலை
ஒரு வீட்டிலேயே, வீட்டுத் தலைவரின் படுக்கை அறை தான் மிகவும் முக்கியமான அறை. நாள் முழுக்க உழைத்த பிறகு, ஓய்வெடுக்கும் அறை தான் படுக்கையறை. படுக்கையறையில் படுத்தவுடன் நல்ல உறக்கம் வந்தால் தான், அடுத்த நாள் சுறுசுறுப்பாக இயங்க முடியும். எனவே வீட்டின் படுக்கை அறை கட்டப் படும் போது மிகவும் கவனத்துடன் கட்ட வேண்டும். படுக்கையறை வீட்டின் தென்மேற்கு மூலையில் (குபேர மூலை) அமைய வேண்டும். அப்படி அமைந்தால், அது வீட்டு உரிமையாளருக்கு நல்ல ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் தரும். மேலும் ஆயுளையும் அதிகரிக்கும். இது மட்டுமல்லாமல் வீட்டில் செல்வம் பெருகும். படுக்கை அறை மட்டும் நன்கு அமைந்து விட்டால் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி தாண்டவமாடும்.
நிறங்கள்
நிறங்கள் அறையை மட்டும் பிரகாசிக்கச் செய்யவில்லை. அவை ஒருவரின் உடல் ஆரோக்கியத்தையும், மன நலத்தையும் பாதிக்கின்றன. எனவே படுக்கை அறையில் பெயிண்ட் அடிக்கும் போது கவனம் தேவை. படுக்கை அறையின் சுவர்களில் மென்மையான உணர்வுகளைத் தரும் நிறங்களையே அடிக்க வேண்டும். பிரகாசமான நிறங்களைத் தவிர்க்க வேண்டும். அவை மன நலத்தை பாதிக்கும். படுக்கை அறையில் விளக்குகள் பிரகாசமாக இருக்கக் கூடாது. மெல்லிய வெளிச்சத்தை வழங்கும் விளக்குகளே அமைக்கப் பட வேண்டும். படுக்கை அறையில் இணைக்கப்பட்ட கழிவறை வடமேற்கு மூலையில் அமைக்கப்பட வேண்டும். அது படுக்கையை நேராக பார்க்குமாறு அமைக்கக் கூடாது. பயன்பாட்டில் இல்லாத போது, கழிப்பறையின் கதவு மூடப் பட்டு இருத்தல் அவசியம்.
கட்டில் மற்றும் மெத்தை
படுக்கையறையில் போடப்படும் கட்டில் மரத்தால் ஆனதாக இருக்க வேண்டும். இரும்பு கட்டில் எதிர்மறை அதிர்வுகளை உண்டாக்கும். ஆகவே இரும்பு கட்டில் கூடாது. கட்டில் மற்றும் மெத்தையைத் தென்மேற்கு மூலையில் கிழக்கு மேற்காகப் போட்டுப் படுக்கும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும். கிழக்கில் தலை வைத்துப் படுத்தால் மிகவும் நல்லது. வடக்கு திசையில் தலை வைத்துப் படுக்கக் கூடாது. மெத்தை மீது விரிக்கப்படும் விரிப்புகள், போர்வைகள், தலையணை உறைகள் ஆகியவற்றின் நிறம் மனதிற்கு இதமானதாக இருக்க வேண்டும். படுக்கை விரிப்புகள், போர்வைகள் மற்றும் தலையணை உறைகள் வீட்டின் தட்ப வெப்ப நிலைக்கு உகந்ததாக இருக்க வேண்டும். வட்டமான மற்றும் முட்டை வடிவமான மெத்தைகளைத் தவிர்க்க வேண்டும். படுக்கை, ஓய்வு எடுக்கவும், உறங்கவும் மட்டுமே பயன் படுத்தப் பட வேண்டும். அமர்ந்து கொண்டு டிவி மற்றும் கம்ப்யூட்டர் பார்ப்பதற்கும், செல்போன் பேசுவதற்கும் பயன் படுத்தப்படக் கூடாது.
டிரெஸ்ஸிங் டேபிள்
படுக்கை அறையில் டிரெஸ்ஸிங் டேபிளை வைக்கும் போது கவனம் தேவை. ஏனெனில் அதில் கண்ணாடி உள்ளது. வாஸ்துப்படி படுக்கையின் முன் ஒரு கண்ணாடி இருந்தால், உறங்குபவர்களின் உடல் அதில் பிரதிபலிக்கும். இது அமங்கலமாகக் கருதப்படுகிறது. உறங்கும் போது தலைக்குப் பின் ஜன்னல் இருந்தால், அதைத்திறந்து வைக்கக் கூடாது. பக்கவாட்டில் உள்ள ஜன்னலைத் திறந்து வைக்கலாம். உத்திரம் மற்றும் லாஃப்ட் ஆகியவற்றிற்குக் கீழ் உறங்கக் கூடாது.
பீரோ
படுக்கை அறையில் கட்டிலைத் தவிர வேறு எந்த ஃபர்னிச்சர்களும் இருக்கக் கூடாது. பீரோ மட்டும் இருக்கலாம். பீரோவை படுக்கை அறையில், தென்மேற்கு மூலையில் வைத்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். செல்வம் பெருகும். சிலருக்கு எந்த திசையை நோக்கி பீரோவை திறக்க வேண்டும் என்ற சந்தேகம் வரும். தெற்கை ஒட்டி வடக்கு பார்த்தவாறும், கிழக்குப் பக்கம் திறக்குமாறும் பீரோவை வைக்கலாம்.
மின்னணு சாதனங்கள்
படுக்கை அறையில் எந்தவிதமான மின்னணு சாதனங்களும் இருக்கக்கூடாது. முக்கியமாக டிவி, கம்ப்யூட்டர் மற்றும் பிரிட்ஜைத் தவிர்க்க வேண்டும். மிக முக்கியமாக செல்போன் இருக்கக் கூடாது. படுக்கை அறையில் தெய்வங்களின் படங்கள் மற்றும் இறந்த மூதாதையரின் படங்கள் ஆகியவற்றை மாட்டக் கூடாது. உடைந்த கலைப் பொருட்கள் இருக்கக் கூடாது. படுக்கையறையில் நீண்ட நாட்களாக உபயோகப் படுத்தப் படாத எந்த விதமான பொருட்களும் இருக்கக் கூடாது. செடிகள், நீர்வீழ்ச்சி, மீன் தொட்டி ஆகியவைகள் இருக்கக் கூடாது. போர்க் காட்சிகள், ஒற்றைப் பெண் ஆகிய ஓவியங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
சுத்தம் மற்றும் வாசனை
படுக்கையறை ஒழுங்காக இருக்க வேண்டும். சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும். குப்பை மற்றும் ஒட்டடை இல்லாமல் இருக்க வேண்டும். படுக்கை விரிப்புகள், போர்வைகள், தலையணை உறைகள் ஆகியவைகள் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். படுக்கை அறையின் தரையை வாரத்தில் ஒரு முறையாவது துடைக்க வேண்டும். அதிலும் உப்பு கலந்த நீரை பயன்படுத்தித் துடைத்தால், படுக்கை அறையில் இருக்கும் கெட்ட அதிர்வு வெளியே சென்று விடும். படுக்கை அறையில் நல்ல வாசனை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இப்படி படுக்கை அறையை அமைத்தால், வீட்டு உரிமையாளருக்கும், மற்றும் அனைவருக்கும் உடல் நலம் மட்டுமன்றி மன நலமும் நன்றாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி எப்போதும் தாண்டவமாடும் என்பது மிகவும் நிச்சயம்!!!