தமிழ்நாடு முழுவதும் கடலோர பகுதிகளில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி புதிய கட்டிடங்கள் கட்டுவதை தடுக்க, இந்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும், கடலோரப் பகுதிகளில் புதிய கட்டுமானத் திட்டங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. குறிப்பாக சென்னை போன்ற மக்கள் தொகை நெரிசல் மிக்க நகரங்களில் குடியிருப்புகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. அதற்காக விதிமுறைகளை மீறுவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.
இவ்வகையில் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்புக்காக கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. கடலோரப் பகுதிகளில் கட்டப்படும் கட்டடங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டியது அவசியம். இதன்படி அனுமதிப் பெறுவோர் சில நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக நகரமைப்பு சட்டப்படி ஒரு திட்டம் அனுமதி பெற்றால் அதை 3 ஆண்டுக்குள் செயல்படுத்தி முடிக்க வேண்டும்.
மூன்றாம் ஆண்டில் பணிகள் முடிக்க முடியாத நிலையில் காலநீட்டிப்பு கோரி விண்ணப்பிக்கலாம். இதில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் கட்டுமான திட்ட அனுமதி கால அளவு ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதி கட்டுமான திட்டங்களுக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் பெற வேண்டும், இந்த ஒப்புதலின் கால அளவு மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் வரை இருந்தது. இதனால் அனுமதி பெற்றவர்கள் வேறு ஏதாவது காரணங்களால் பணிகளை முடிக்க முடியாத நிலையில் அனுமதியை புதுப்பிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இதை கருத்தில் வைத்து, கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையர் அனுமதியின் செல்லத்தக்க கால அளவு 7 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருமுறை இந்த அனுமதியை பெற்ற திட்டத்தில் பணிகளை முடிப்பதற்கான கால அவகாசம் 7 ஆண்டுகள் வரை இருக்கும். அரசின் இந்த உத்தரவால் கடலோர பகுதிகளில் கட்டுமான திட்டங்களை மேற்கொள்வோர் நிம்மதியாக வேலை செய்யும் சூழல் உருவாகியுள்ளது.
- M. ஞானசேகர், தொழில் மற்றும் விவசாய ஆலோசகர் | M: 95662 53929