இயற்கை தந்த பசுமையான உலகத்துக்கு நடுவே மனிதன் உருவாக்கிய நாகரிக உலகம் முழுவதும் சிமெண்டால் ஆனது. பருவநிலை மாற்றமும், புவி வெப்பம் அடைதலும், உலகின் உயிர்ச் சூழலுக்கு அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில், அதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்றாக உள்ளது இந்த சிமெண்ட்.
சிமெண்ட் இல்லாமல் எந்தக் கட்டுமானமும், வளர்ச்சியும் சாத்தியமில்லை என்ற பாதையில் இன்றைய உலகம் நடைபோடுகிறது. ஆனால், பரபரப்பான இந்த நாகரிக உலகத்துடன் தொடர்பில்லாமல் ஒதுங்கி வாழும் மேகாலயாவின் பழங்குடிகள் சிமெண்ட்டும், ஜல்லியும், இரும்பும் இல்லாமல் பாலம் கட்டும் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கி, அதனை பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தியும் வருகிறார்கள்.
உயிரோடு இருக்கும் மரத்தின் வேர்களைக் கொண்டு அவர்கள் உருவாக்கிய இந்த 'வாழும் பாலங்கள்', நூற்றாண்டுகள் நிலைத்து நின்று அதன் வீரியத்தையும், மாற்று வழியையும் காட்டுகின்றன. பல நூற்றாண்டுகளாக மலையின் அமைதியில் புதைந்து கிடந்த இந்த ரகசியத்தை உலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து பிரபலப்படுத்தியுள்ளார் தமிழர் ஒருவர்.
பெரணையும், துடைப்பப் புல்லும், மந்தாரை மரங்களும், இன்னும் பெயர் தெரியாத பல செடி, கொடிகளும், மரங்களும் பாசியைப் போல அப்பிக் கிடக்கும் மேகாலயாவின் கிழக்கு காசி மலை.
வங்கதேச எல்லை நோக்கிச் செல்லும் ஒரு மலைச் சாலையில் இருந்து பிரிகிறது ஒரு மண் பாதை. மடிப்பு மடிப்பாக பிரிந்து கீழிறங்கும் அந்த மண் பாதையில், சுமார் 20 கி.மீ. பயணித்தால் சுற்றிலும் மலை சூழ்ந்திருக்கும் ஒரு தரைப்பகுதியில் கால் பதிக்க முடியும்.
அங்கே மலை தனது சுருக்குப் பையில் பொதித்து வைத்திருக்கும் சிறுவாடாக கிடக்கிறது ஓடைக் கரையோர மலைக் கிராமம் ரிவாய்.
உடலையும், உள்ளத்தையும் சிலிர்ப்பூட்டும் சில்லென்ற இயற்கை மட்டுமே அந்த ஊரின் அடையாளம் அல்ல. இயற்கையைக் காயப்படுத்தாத ஓர் அழகிய, பாரம்பரிய தொழில் நுட்பம்தான் உண்மையில் அந்த ஊரின் அடையாளமாகியுள்ளது.
ரிவாய் கிராமத்தையும் அருகில் உள்ள நொவீட் கிராமத்தையும் பிளந்துகொண்டு ஓடும் ஓர் ஓடையைக் கடக்க சுமார் 180 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊரின் பழங்குடி முன்னோர்கள் அந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஓடைக்கரையோரம் 1840ல் நடப்பட்ட ஒரு ரப்பர் மரத்தின் வேரை கொஞ்சம் கொஞ்சமாக பின்னி, ஓடையைக் கடக்கும் ஒரு பாலத்தையே உருவாக்கிவிட்டார்கள் அந்த பழங்குடி முன்னோர்கள். காலம் போகப் போக அந்த வேர்கள் தடித்து, திரண்டு அந்தப் பாலம் ஒரு வலிமையான, மனிதர்கள் நடந்து செல்லக்கூடய ஒரு பாலமாக உருவெடுத்துவிட்டது.
இந்த ஊரில் மட்டுமல்ல, மேகாலயாவின் வேறு சில ஊர்களிலும் காணப்படும், இத்தகைய வேர்ப்பாலங்கள் ஒரு அமைதியான தொழில்நுட்பமாக மலையின் ஏகாந்தத்தில் பல காலம் உறங்கிக் கிடந்தன. ஆனால், சுமார் 10 ஆண்டுகளாக இந்த வேர்ப் பாலங்கள் மேகாலயாவின் சுற்றுலா அடையாளமாகவே உருவாகிவிட்டன.
நில வாழ்வின் பரபரப்புகள் தீண்டாத ஏகாந்த வெளியில் அமைந்துள்ள இந்த ஊர்களுக்கு தினமும் தற்போது நூற்றுக் கணக்கான சுற்றுலா கார்கள் வந்து செல்கின்றன.