வீட்டு கட்டுமானத்தில் வாஸ்து இருக்கா? இல்லையா ? பலன் இருக்கா? இல்லையா? ஓர் அலசல்


கட்டிடம் கட்டுவதற்கு இடம் பார்ப்பதில் இருந்து கட்டிடத்திற்கு அடிக்கும் கலர் வரை அனைத்து விஷயங்களையும் ஆட்டி படைக்கும் விஷயம் “வாஸ்து”.


நான் வீடு கட்டலாம்னு இருக்கேன்னு யாரிடமாவது நாம் சொன்ன மறுநிமிடம் அவரிடமிருந்து வரும் அடுத்த கேள்வி வாஸ்து பார்த்திட்டியா?


ஜாதி மதம் பேதமின்றி அனைவரையும் இணைக்கும் ஒரே விஷயம் இந்த வாஸ்து. இப்போது வெளிநாட்டினரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.


பலரும் தற்போது வாஸ்து வல்லுநர்கள் என்று கலம் இறங்கி விட்டார்கள்,  பல ஜோதிடர்களும் வாஸ்து ஜோதிடம் என்று தன்னை சிறப்பு படுத்தி கொள்கின்றனர்.   அதிகமாக விற்கும் புத்தகங்களின் வகைகளில் வாஸ்து புத்தகங்கள்  முன்னிடம் பெற்றுள்ளது.


போர் போடுவதில் வாஸ்து, டேபிள் அமைப்பதில் வாஸ்து, உட்காரும் திசையில் வாஸ்து, நீள அகலங்களில் வாஸ்து, ஜன்னல் கதவுகளில் வாஸ்து, ஏன் கழிவறையில் கோப்பை வைக்கும் திசையில் வாஸ்து இப்படி கட்டுமான உலகையே கட்டுக்குள் வைத்திருக்கும் வாஸ்து உண்மையா ? பொய்யா ? இருக்கா ? இல்லையா ? ஓர் அலசல் …


வாஸ்து சாஸ்திரம் என்று சொல்ல பட்டாலும் பழங்காலம் தொட்டு பழக்கத்தில் உள்ளது என்று கூறினாலும் இதை இவர்தான் உருவாக்கியவர் என்றோ இந்த சாஸ்திரத்தை இவர்தான் இயற்றினார் என்றோ சொல்ல முடியாது. இதற்கென முறையாக விதிமுறைகள் புத்தகங்களோ, அல்லது விளக்கங்களோ கிடையாது.


அதனாலேயே பலரும் தங்களுக்கு தெரிந்த விஷயங்களை எல்லாம் சாஸ்திரங்களாக்கி கொண்டுள்ளனர்.


உண்மையில் இந்த வாஸ்து சாஸ்திரம் என்பது நாம் இன்று சொல்லும் பொறியியல் என்ற திறனுக்கு அந்த காலத்தில் உள்ள விளக்கமே வாஸ்து சாஸ்திரம்.  இன்று அது ஒரு கல்வி அன்று அது ஒரு சாஸ்திரம் ! அவ்வளவே !


வாஸ்து சாஸ்திரம் உருவானது நமது தமிழ்நாட்டின் நில அமைப்பை வைத்தே பல வாஸ்து விபரங்கள் நமது தமிழ்நாட்டுக்கு மட்டுமே பொருந்தும்.


தற்போது சொல்லப்படும் அனைத்து வாஸ்துக்களும் உண்மையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ள வேண்டும்.  ஏனென்றால் தடி எடுத்தவனெல்லாம் இன்று தண்டல் காரனாகிவிட்டார்கள்.


சில அடிப்படை  வாஸ்துக்களும் அதன் விளக்கங்களும் :


முதலில் சில அடிப்படை விஷயங்கள் பாப்போம் :


உலகின் பல விஷயங்கள் தண்ணீரை அடிப்படையாக கொண்டே வடிவமைக்க பட்டு உள்ளது.   எடை மற்றும் கொள்ளளவு முதல் (1லிட்டர் தண்ணீர் =1கிலோ எடை , 1000லிட்டர் தண்ணீர் =1கண மீட்டர் )  அனைத்தும் தண்ணீரை அடிப்படையாக கொண்டே  கணக்கிட்டார்கள்.  இதற்கும் முன்னோடி நம் தமிழர்கள்தான்.  இதைபோல்தான் இந்த வாஸ்து சாஸ்திரமும் தண்ணீரின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.


நம் தமிழ் நாட்டின் அமைப்பை பொறுத்தவரை மேற்க்கே உயர்த்தும் கிழக்கே தாழ்ந்தும் உள்ளது.  நில மேற்பரப்பு மட்டுமின்றி நிலத்திற்கு அடியிலும் அவ்வாறே அமைந்துள்ளது.  நமது மேல்புற நீரோட்டமின்றி தரையின் அடியில் உள்ள நீரோட்டமும் அவ்வாறே உள்ளது.  நமது தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளும் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கியே சென்று கடலில் கலக்கின்றன.  அதுவே இயற்க்கை.


எனவேதான் கிணறுகள் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க  வடகிழக்கு மூலையான ஈசானியம் சொல்லப்படுகிறது.


அதேபோல் சமையலறையும், பாத்ரூமும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும், சுத்தமாக இறுக்க வேண்டுமென்றால் வெளிச்சமாகவும், காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும்.  நமக்கு இருவகையான பருவங்களில் இருவகையான காற்றுகள் கிடைக்கின்றன அது வடகிழக்கு பருவகாற்று, தென்மேற்கு பருவக்காற்று அதாவது வடகிழக்கிலுருந்து ஒரு காற்றும் தென்மேற்கிலிருந்து ஒரு காற்றும் நமக்கு கிடைக்கிறது.


எனவே தென்கிழக்கில் சமையலறையும், வடமேற்கில் பாத்ரூமும் பரிந்துரைக்க படுகிறது அதுவும் கட்டிடத்தை ஈசானியம் பார்த்தும் கட்ட சொல்கிறது சாஸ்திரம் அதனால் நமது வீடு சிறிது வடகிழக்கு நோக்கி இருக்கும் அதனால் வடகிழக்கு பருவ காற்று வீசும்போதும் சமையலறைக்கும், பாத்ரூமுக்கும்  காற்றோட்டம் கிடைக்கும் தென்மேற்கு பருவக்காற்று வீசும்போதும் காற்றோட்டம் கிடைக்கும்.  அதேபோல் காலை மாலை  இருநேரமும் வெளிச்சமும் கிடைக்கும்.


ஈசானியில்  படிப்பறை அமைப்பதால் இளம்காலை சூரியனினின் கதிர்களால் புத்துணர்வுடன் படிக்கலாம், கன்னி மூலையில் பூஜை ரூம் அமைப்பதால் மாலை ஒளியில் தென்றலுடன் முழு மன அமைதியுடன் இறைவனை பிரார்த்திக்கலாம்.


கதவுகளும் ஜன்னல்களும் நேருக்கு நேராக இருந்தால் மட்டுமே வீட்டிற்குள் செல்லும் காற்று மறுவழியாக வெளியேற முடியும் எனவே அசுத்த காற்று வீட்டிற்குள் தங்காது.


படிக்கட்டுகளில் நாம் ஏறும் பொது இடது கையில் பொருட்கள் எடுத்து கொண்டு வலது கையில் கம்பி பிடித்து ஏற வேண்டும் எனவே வளம் சுற்றி அமைக்க வேண்டும்.


நமது பழக்கம் எப்போது வலது காலையே முன்னெடுத்து வைப்பது (அப்படி செய்யாதவர்களையும் செய்ய வைக்க வலது காலை எடுத்து வைத்து வா என்பர்) வலது காலில் ஆரம்பித்து வீட்டிற்குள் காலை வைக்கும் போதும் வலது காலுடன் உள் நுழையவே ஒற்றைப்படையில் படி அமைக்க சொல்லுவது.


இப்படி அனைத்து வாஸ்துக்களுக்கும் ஒரு விஞ்ஞான விஷயங்கள் ஒளிந்திருப்பதை காணலாம்.  இவற்றை நாம் மதித்து செய்தால் மட்டுமே சுகாதாரமுடன் இருப்போம்.  சுகாதாரம் நம் வீட்டில் குடிபுகுந்தால் சந்தோஷத்துக்கு குறைவேது .


இவற்றை நாம் பின்பற்றாமல் இருந்து விடுவோம் என பயந்தே நம் முன்னோர்கள் இப்படி அமைத்தால்தான் நல்லது இல்லையென்றால் அப்படி நடக்கும் இப்படி நடக்கும் என பயமுறுத்தி இருக்கலாம்.  ஏனென்றால் நாம் உடல் நலத்தை விட பொருள் இழப்புக்கே பயப்படுவோம்.


ஆனால் இதையே இன்று பலர் பண ஈட்டுக்கு பயன்படுத்துகின்றனர்.


எனவே நாம் இந்த விஷயத்தில் அன்னப்பறவை போல்தான் செயல்பட வேண்டும், வாஸ்து சாஸ்திரம் அறிந்து பயன்படுத்திடுவோம்.  தவறுகளையும் தவறு செய்பவர்களையும் ஒதுக்குவோம்.