100 ஆண்டுகளை கடந்து கடலுக்கு நடுவில் கம்பீரமாக காட்சி அளிக்கும்

பாம்பன்பாலம்                                                                                                                                                                          பாக்குநீரிணையில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெருநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் ஒரு 'நடுவில் திறக்கும்' பாலமாகும். இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இப்பாலம் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் ஆகும். இப்போது பாம்பன் தொடருந்துப் பாலம், பாம்பன் பேருந்துப் பாலம் என இரண்டாக அழைக்கப்பட்டாலும் பொதுவாக தொடருந்துப் பாலத்தையே பாம்பன் பாலம் எனக் குறிப்பிடுவர்.


வரலாறு


மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து பாக் ஜலசந்தி பகுதிக்கு கப்பல்கள் சென்று வருவதற்காக கடந்த 1854-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் பாம்பனில் சுமார் 80 அடி அகலம், 300 அடி நீளத்தில் கால்வாய் தோண்டப்பட்டது. பின்னர் அந்த கால்வாயில் சிறிய அளவிலான சரக்கு கப்பல்கள் சென்று வரத்தொடங்கின.

அப்போது மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் செல்வதற்கு படகுகளை மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் அந்த தீவினை மண்டபத்துடன் இணைக்க ஒரு ரயில்வே பாலத்தை அமைக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர். அதுவும் வர்த்தக நோக்கத்தில் தான்.

இந்த புதிய ரயில்வே தூக்குப்பாலத்தை கட்டுவதற்கான முதற்கட்டப் பணிகள் 1902-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. இந்த பாலத்திற்காக 146 இரும்பு தூண்கள் கடலுக்குள் அமைக்கப்பட்டு அவற்றின் மீது 145 இரும்பு கர்டர்கள் பொருத்தப்பட்டன.

பின்னர் ரயில் செல்வதற்காக தண்டவாளம் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் 1911-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டு 1913-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முழுமையாக முடிக்கப்பட்டது. சுமார் 600 தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இந்த பாலத்தை அமைக்கும் பணிகளை செய்தவர் ஆங்கிலேய பொறியாளர் ஷெர்சர். பல்வேறு இயற்கை சீற்றங்கள், தடைகளை கடந்து 11 ஆண்டுகளாக ரயில்வே தூக்குப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

கடலுக்குள் பெரிய தூண்கள் அமைக்கப்பட்டு அதன் 2 பகுதிகளிலும் 81 டிகிரி கோணத்தில் திறந்து மூடும் வகையிலான இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டன. இந்த தூக்குப் பாலத்திற்கு ஷெர்சரின் நினைவாக ஷெர்சர் தூக்குப்பாலம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.


இப்பாலமே இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான கடல் தொடருந்துப் பாலமாகும். இதன் நீளம் 2.3 கி.மீ. பாம்பன் ரயில் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது. இதை 1914ஆம் ஆண்டு திறந்தனர். இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர். தொடக்கத்தில் குறுகிய அகல தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே கட்டினர். பின்னர் இதை அகலப் பாதைத் தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு இந்திய இரயில்வே 2007 இல் புதுப்பித்தது. இதில் 146 சிறு இடைவெளிகள் உள்ளன. இதன் இருபுறமும் உள்ள முக்கிய தூணின் உயரம் 220 அடி ஆகும். ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் நடுவில் திறக்கும் வாசல் வழியாகச் செல்கின்றன.


ராமேஸ்வரத்திற்கு பேருந்து பாலம் முதன் முதலாக 1988 இல் தொடங்கப்பட்டது. இப்பாலத்திற்கு இந்திரா காந்தி பேருந்து மேம்பாலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இம் மேம்பாலத்தில் இருந்து அருகிலுள்ள தீவுகளையும் பாலத்திற்குக் கீழே செல்லும் தொடருந்துப் பாலத்தையும் காண முடியும்.



கட்டுமானப் பொருட்கள்


பாலம் கட்ட தேவையான 18,000 டன் சல்லிக் கற்கள் 270 கி.மீ. தொலைவிலிருத்தும் மணல் 110 கி.மீ. தொலைவிலிருத்தும் எடுத்து வரப்பட்டது.



இப்பாலம் வாரம் ஒரு முறை திறக்கப்படுகிறது. இதன் நூற்றாண்டு விழா  கடந்த 2014ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.



பாலத்தின் செயல்பாடுகள்


பாம்பன் பாலம் உலகின் மிகவும் அதிக அளலில் துருப்பிடிக்கத் தக்க பகுதியில் (ஐக்கிய அமெரிக்காவின் மயாமிக்கு அடுத்தபடியாக) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதற்கான கட்டுமானப் பணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே நடைபெற்றன.


1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி இரவு ஏற்பட்ட பயங்கர புயலால் தனுஷ்கோடி நகரமே முழுமையாக அழிந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக இறந்தனர். ஆனால் அந்த புயலிலும் பாம்பன் ரயில் பாலத்திற்கு பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.அந்த புயலினால் பாலத்திற்கு ஏற்பட்ட சிறிதளவு சேதங்களை சரி செய்ய ஓராண்டு ஆனது. இதனால் அந்த காலக்கட்டத்தில் மட்டும் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.


இன்று வரையிலும் பாம்பன் தூக்குப் பாலத்தை கடக்க கப்பல்கள் வரும் போது மனித சக்தியால் தான் பாலம் மேல் நோக்கி தூக்கப்பட்டு திறக்கப்படுகிறது. தூக்குப்பாலத்தை திறக்கவும், மூடுவதற்கும் இரு புறத்திலும் ஒரு பகுதிக்கு 8 ரயில்வே ஊழியர்கள் வீதம் 16 பேர் நின்று பற்சக்கரங்களை சுற்றுவார்கள். அப்போது தூக்குப்பாலம் சிறிது சிறிதாக மேலே உயரும். கப்பல் சென்ற பிறகும் இதே நடைமுறைப்படி பாலம் மீண்டும் ரயில் செல்லும் வகையில் பழைய நிலைக்கு கொண்டு வரப்படும்.


முடிவுரை


பாக்கு நீரிணையில் இரண்டு கி.மீ தொலைவுக்குப் பரந்திருக்கும் இப்பாலம் இந்தியப் பெருநிலப்பரப்பையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் முதல் பாலமாகும்.


ராமேசுவரத்துக்கு செல்வதற்கான சிமெண்டு பாலம் வழியாக வாகனங்களில் வருபவர்கள், அதில் இருந்து இறங்கி பாம்பன் ரயில்வே தூக்குப்பாலத்தை ரசிக்காமல் செல்வதில்லை. கடலுக்கு நடுவில் கம்பீரமாக காட்சி அளிக்கும் பாம்பன் பாலம் இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பது தமிழர்களின் விருப்பம்.

- கே சுசித்ரா