சென்னை மாநகராட்சி பகுதிகளில் அழைத்தால் இணைப்பு

இனி சென்னை மாநகராட்சி பகுதிகளில்
எளிய முறையில் கழிவு நீர் இணைப்பு பெறலாம்


சென்னை குடிநீர் வாரியத்தால் தற்சமயம் 30 நாட்களில் கழிவுநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நடைமுறையில் முழுத்தொகையும் முன்னரே செலுத்தி, அனைத்து ஆவணங்களும் பொதுமக்கள் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. கழிவுநீர் இணைப்புக்கான பணியினை மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதனால் காலதாமதம் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். இதை உணர்ந்த தமிழக அரசு, இந்த நடைமுறையை எளிமைப்படுத்தும் நோக்கத்தோடு 2 புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது.


1) அழைத்தால் இணைப்பு : இத்திட்டத்தில் சென்னை பெருநகரில் உள்ள தரை தளம் மற்றும் இரண்டு தளங்கள் வரையுள்ள கட்டடங்களுக்கு, பொதுமக்கள் சென்னை குடிநீர் வாரியத்திற்கு 044-45674567 தொலைபேசி மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ பதிவு செய்தவுடன் எந்தவித ஆவணங்களும் இன்றி எளிய நடைமுறையில் கழிவு நீர் இணைப்பு வழங்கப்படும்.


2) இல்லந்தோறும் இணைப்பு : இத்திட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை கட்டமைப்புகளுடன் கழிவுநீர் இல்லாத வீடுகளுக்கு சென்னை குடிநீர் வாரியமே தாமாக கழிவு நீர் இணைப்பு வழங்கும்.


பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள வார்டுகளிலும் (1 முதல் 200 வார்டுகள்), கழிவுநீர் கட்டமைப்பு உள்ள பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்கு புதிய கழிவுநீர் இணைப்பு வழங்குவதற்காகவும் மற்றும் பழைய கழிவுநீர் இணைப்பை புதுப்பிக்கவும், பதிவு செய்து பயன்பெறலாம்.


மேற்படி இரண்டு திட்டங்களிலும் பொதுமக்கள், கழிவுநீர் இணைப்பு கொடுத்த பின்பு, சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய கழிவுநீர் கட்டணத் தொகையை ஒரே தவணையில் முழுமையாகவோ அல்லது ஐந்து வருடத்திற்குள் 10 தவணைகளாகவோ, வரி மற்றும் குடிநீர் கட்டணத்துடன், செலுத்த ஏதுவாக இத்திட்டங்கள் கடந்த 02.12.2019 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.


மேலும் விவரங்கள் அறிய சென்னை குடிநீர் வாரியத்தின் இணையதளம் (https://chennaimetrowater.tn.gov.in/) மூலமாக தொடர்பு கொள்ளலாம்.